Unspeakable Inequalities: சாதியும் பெண்களும் (Caste and women)

கவின் மலர்
Kavin Malar

(Caste and patriarchy intersect and manifest as violence in practices like rape, honour killings, custodial torture and forced marriage.)

இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் எப்போதும் தங்கள் சாதியுடன் தொடர்புடையவர்கள். பெண் எனும் பிள்ளை பெறும் எந்திரம் தன் சாதிக்கு பிள்ளை பெற்று சாதியின் மக்கள்தொகையை வளர்க்கவேண்டும்.. தன் சாதிப் பெருமை பேச பறைசாற்ற இன்னுமொரு உயிரை ஈன்றெடுக்கும் பெண் எனும் மனித உயிருக்கு இந்திய சமூகத்தில் என்ன மரியாதை உள்ளது என்று பார்த்தால் பூஜ்ஜியம்தான்.

பெண்ணின் உடல் எப்படி பார்க்கப்படுகிறது? அது ஒரு பண்டம். ஆண்களுக்கான ஒரு நுகர்வுபொருள் அது. அந்த நுகர்வு பொருளை ஆண் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த அவனுக்கு உரிமை இருப்பதாக நினைத்துக்கொள்கிறான். ‘இது இன்னொரு உடல், இன்னொரு ஜீவனுடைய உடல்’ என்கிற உணர்வின்றி பேருந்துக்களிலும், பொது இடங்களிலும் காம வேட்கையுடன் பெண்களை பார்ப்பதும், அவர்களை சீண்டுவதுமாக ஆண்கள் செய்பவற்றிற்கு அவர்களின் காமவேட்கை மட்டும்தான் காரணமா? காமம் கண்ணை மறைக்கிறது என்றால் தன் வீட்டுப்பெண்களான தாய் அல்லது சகோதரியிடம் இப்படி நடந்துகொள்வதில்லை. அவர்களிடத்தில் இந்த காம இச்சை தோன்றுவதில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். நாம் பெரும்பான்மை குறித்துப்பேசுவோம். இத்தகைய ஆண்கள் பெண்கள் தொந்தரவுக்குள்ளாகும்படி பார்வையால் அல்லது கைகளால் சீண்டுவதும் அத்துமீறுவதுமான செயல்களில் ஈடுபடுவதன் பின்னாலுள்ள உளவியல் யோசிக்கப்படவேண்டியது. பிற பெண்கள் அனைவருமே தன்னுடையை உடைமைகள் என்கிற மனோபாவம் அது. இன்னொருவருடைய பொருள் என்றால் எடுத்து பயன்படுத்த தயங்கும் கைகள் தன்னுடையது என்றால் உரிமையுடன் எடுப்பதுபோல, எல்லா பெண்களின் உடலும் தன் சுகிப்புக்குரியது என்று எண்ணும் ஆண்தனம்தான் ஓர் ஆணை அடுத்தவர் உடலென்றால் பெண்ணை தீண்டவும் முறைக்கவும் உற்றுப் பார்க்கவும் வைக்கிறது. பெண் என்பவள் ஒரு தனியான ஜீவன். அவள் உடல் அவளுக்குத்தான் சொந்தம் என்கிற உணர்வும் புரிதலும் எள்ளளவும் இங்கே இல்லை.

பிறந்தவுடன் பெண்ணின் உடல் பெற்றோருக்கு சொந்தம். அந்த உடல் எங்கே செல்ல வேண்டும், செல்லக்கூடாது, அந்த உடலை யார் பார்க்கவேண்டும், யாருடன் அந்த உடல் உறவுகொள்ளவேண்டும் என்பதையும் பெற்றோரே நிர்ணயிக்க எண்ணுகிறார்கள். வீட்டில் சகோதர சகோதரியர் உட்பட மூத்தவர்கள் இருந்தால், பெண் உடல் குறித்த இந்த கண்காணிப்பில் மொத்த குடும்பமும் ஈடுபடும். உறவினர்களும் கூட. உறவினர்கள் என்பதும் குடும்பம் என்பதும் இங்கே இந்தியாவில் சாதிச்சமூகம்தான். சாதிக்காரர்களுக்கு இங்கே பல பெயர்கள் உண்டு. சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா என்பதிலிருந்து கொஞ்சம் யோசித்தால் கூடப்பிறந்த அண்ணன், அக்கா, அம்மா, அப்பா என்று எல்லோருமே சாதிக்காரர்் கள்தான். ஆக உரிமை என்கிற பெயரிலோ அல்லது பாசம் என்கிற பெயரிலோ பெண்ணின் உடல் தன் சாதியைச் சேர்ந்த ஒருவன் அனுபவிக்கவே இருக்கிறது. என்கிற எண்ணத்தை அழுத்தமாகக் கொண்டிருக்கின்றனர். பெண்ணுடல் குறித்து இவர்கள் வகுத்துக்கொண்ட விதிமுறைகள் எல்லாமே சாதியின் பெயரால் இருந்தாலும் வெளியில் அப்படித் தெரிவதில்லை. அப்படி சொல்லிக்கொள்வதுமில்லை. ‘அவளுக்கு எது நல்லதென்று எங்களுக்குத் தெரியாதா?’ என்றோ, ’அவளுக்கு என்ன தெரியும்? பெரியவர்கள் பார்த்துக்கொள்வோம்’ என்றோ ‘என் பெண்ணை பொத்திப் பொத்தி வளர்த்தேன். அத்தனை செல்லம்’ என்றோ சொல்கிறார்கள். ஒன்று பெண்ணுக்கு ஒன்றும் தெரியாது. அவளால் தன் துணையை தான் தேட முடியாது என்கிற கருத்தோ அல்லது எங்கள் பெண்ணுக்கு நாங்கள்தான் துணை தேடுவோம் என்கிற இறுமாப்போ வெளிப்படுகிறது. அதன்பின்னால் சாதிதான் தன் கோர முகத்தை மறைத்துக்கொண்டு அந்தஸ்து,, பாசம், பற்று, கௌரவம் என்கிற வெவ்வேறு பெயர்களின் வாழ்கிறது.

பெண்ணை ஏன் ’பொத்திப் பொத்தி’ வளர்க்கவேண்டும்? எந்த ஆணையும் பொத்தி வளர்த்ததாக பெற்றோர் சொல்லி கேட்டிருப்போமா? ‘கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தேன்’ என்று கண்ணீர் வடிக்கையில் அந்தக் கிளியை எப்படி வளர்த்தோம் என்பதையாவது எண்ணிப் பார்ப்பதுண்டா? சுதந்திரமாக பறக்கவேண்டிய கிளியை கூண்டில் அடைத்துவிட்டீர்கள். கிளி பறந்தாலும் மாலையில் கூடு அடைய வந்துவிடும் என்கிற நம்பிக்கை இல்லாமல் வேறு சாதிக்கிளியோடு பறந்துவிடுமோ என்கிற பயத்தில்தானே கூண்டில் அடைக்கப்படுகிறது. அதை அதன்போக்கில் விட்டிருந்தால் இன்னொரு கிளிக்காவது துணையாய் இருந்திருக்கும். ஆனால் நீங்களோ ஒன்றுசேரவே முடியாத பூனையின் கையில் சாதியின் பெயரால் ஒப்படைக்கிறீர்கள். பெரும்பாலான கிளிகளுக்குத் தெரியும்; முதல் பார்வையிலேயே இது கிளியல்ல..பூனை என்று. சில சமயங்களில் கிளிகளும் சாதியை நம்பி பூனைகளை கிளிகள் என்றெண்ணி ஏமாறுவதும் உண்டு. இப்படி ஏமாறுவதைத்தான் அகமண முறை என்கின்றனர். தன் சாதிக்குள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் விருப்பம் அல்ல. எல்லா பெண்களும் அவரவர் பருவத்தில் எவர் மீதேனும் மையல் கொண்டிருக்கக் கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த மையல் காதலாக கனியாமல் சாதி குறுக்கே விழுந்து தடுத்துவிடுகிறது. பல பெண்கள் தங்களை காதலிப்பவர்களை பிடித்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கும், காதலைச் சொல்லாமல் மறைத்துக்கொள்வதற்கும், அப்படியே பிடித்து, ஒப்புக்கொண்டு காதலித்தாலும் அது பாதியில் முடிந்துபோவதற்கும் பின்னால் சாதி அல்லது மதம் இயங்குகிறது. ஆண்கள் காதல் தோல்வியில் கவிதை எழுதுவதோ தாடி வளர்ப்பதோ வெளியுலகுக்குத் தெரிகிறது. ஆனால் பெண்களின் மனம் மௌனமாய் கண்ணீர் வடிப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இன்னொரு கிளியைத் தேடிய மனம் தெரிந்தே பூனைக்கு துணையாவது இப்படித்தான். ஆனால் ஆண்கள் நிறைந்த இவ்வுலகில் இலக்கியம், சினிமா, கதை, கவிதை என்று எல்லா வடிவங்களையும் கைப்பற்றி கோலோச்சும் ஆண்கள் பெரும்பாலும் பெண்கள் குறித்து ஏமாற்றுபவர்கள், தன்னைக் காதலித்துவிட்டு இன்னொருவனை மணம் செய்துகொள்பவர்கள் என்று சித்தரிக்கின்றனர். இந்தியாவில் இப்படியான சித்தரிப்புகளால் இகழப்படுபவர்கள் பெண்களாக இருந்தாலும் மறைமுகமாக அங்கே இகழப்படுவது சாதியோ அல்லது மதமோதான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தன்னைவிட்டுச் சென்ற பெண்ணை குறைசொல்லாமல், அவளை அதற்கு நிர்பந்தப்படுத்திய சாதியையோ மதத்தையோ வெளிப்படையாக குற்றம் சொல்ல முடியவில்லை. இது குறித்தெல்லாம் பேசாமால் மேம்போக்காக பெண்ணை குறைசொல்லிக்கொண்டிருப்பது அவர்களுக்கு மிகவும் வசதியாய் இருக்கிறது. அப்போதுதான் இன்னொரு திருமணத்தை சாதிக்குள்ளேயே செய்துகொண்டு தான் பெற்றெடுக்கும் பெண்ணுக்கும் தான் காதலித்த பெண்ணுக்கு அவள் வீட்டார் செய்ததையே தானும் செய்யலாம்.

எல்லாம் சரி. ஏன் பெண்கள் தைரியமாக சாதிய வட்டத்தையோ மத நிர்பந்தத்தையோ தாண்டி வரலாமே? ஏன் வருவதில்லை? நம் வீடுகளில் பெண்களின் வளர்ப்பு அப்படி. இயல்பிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு கோடு போட்டு வளர்த்து பெண்கள் இதை மட்டும்தான் செய்யவேண்டும் இதைச் செய்யக்கூடாது என்கிற கட்டுப்பாட்டுக்குள்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோரையோ அல்லது வீட்டையோ மீறும் துணிவு அவர்களுக்கு இல்லை என்பதற்கு அவர்கள் காரணம் இல்லை. ஏனெனில் அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். துணையின்றி வெளியே செல்வதற்குக் கூட அனுமதிக்கப்படாத பெரும்பாலான பெண்களுக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று நாய்கட்கு இருக்கவேண்டியவற்றை பெண்ணின் இயல்பாக மாற்றிக் காட்டியுள்ள நம் சமூகத்தின் பெண்கள் எதிர்நீச்சல் போடவும் எதிர்த்து நிற்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி எதிர்த்து நிற்பவர்களே கௌரவக் கொலைகள் என்கிற பெயரில் உயிர் பறிக்கப்படுகின்றனர்.

எவிடென்ஸ் அமைப்பு நடத்திய அண்மை ஆய்வுகளில் இந்த ஆண்டு மட்டும் 17 கௌரவக் கொலைகள் தமிழகத்தில் நடந்திருப்பதாக அறிகிறோம். இவை கணக்கில் வந்த, வழக்கு பதியப்பட்ட கொலைகள். வெளியில் தெரியாமல் எத்தனை நடக்கிறதோ யாருக்குத் தெரியும்? பல கொலைகள் தற்கொலை என்கிற பெயர் பெறுகின்றன. ‘வயிற்றுவலியால் தற்கொலை’ என்றே பல வழக்குகள் மூடப்படுகின்றன. கௌரவக் கொலைகளில் கொலை செய்பவர்கள் குடும்பத்தாராக இருப்பதால், புகார் கொடுக்கவும், வழக்கு தொடுக்கவும் யார் இருப்பார்கள் என்பது கேள்விக்குறி. இப்படித்தான் பல கௌரவக்கொலைகள் மூடி மறைக்கப்படுகின்றன.

படிநிலையில் தன் சாதியைவிட கீழ் உள்ள சாதியிலிருந்து ஒரு ஆணை பெண் காதலித்துவிட்டால், அந்தப் பெண் கொல்லப்படுகிறாள். குறிப்பாக அந்த ஆண் தலித்தாக இருந்தால் ஒன்று அந்தப் பெண் ஊரைவிட்டு வெளியேறி கண்காணாத இடத்தில் வாழவேண்டும். அல்லது கொலையுண்டு சாகவேண்டும் என்பதே தமிழகத்தின் தற்போதைய நிலைமை. அதிலும் தர்மபுரி சாதிய வன்முறைகளுக்குப் பின் தமிழகத்தில் நடைபெறும் சாதிய அரசியலும், மக்களை தலித், தலித் அல்லாதோர் என்று பிரித்து வைப்பதுமாக மிகவும் முனைப்புடன் நடந்து வரும் முயற்சிகள் மக்கள் மனங்களை மேலும் சாதியத்துக்குள் அமிழ்த்துவிட்டிருக்கின்றன.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே சூரக்கோட்டையில் மாரிமுத்து என்கிற தலித் இளைஞரை மணம் செய்துகொண்ட அபிராமி இன்று கணவனை கோரமான கொலையின் மூலம் இழந்து, கைக்குழந்தையுடன் நிராதரவாக நிற்கிறார். காரணம் சாதி. ஆதிக்க சாதி வெறி. விழுப்புரத்தைச் சேர்ந்த கோகிலா என்கிற பறையர் பெண் கார்த்திகேயன் என்கிற அருந்த்திய இன இளைஞரை மணந்ததற்காக கொல்லப்பட்டார். காந்தளவாடியைச் சேர்ந்த பிரியா என்கிற பறையர் இனப்பெண் தன் தலித் இனத்தைச் சேர்ந்த பையனும் வன்னிய இனத்தைச் சேர்ந்த பெண்ணும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டபின், அவர்களுக்கு தோழி என்கிற காரணத்தாலேயே கொல்லப்பட்டார். காரணம் சாதி. சிட்டாம்பூண்டி என்கிற கிராமத்தில் ஒரு வன்னிய இளைஞரை கைபிடித்த காவேரியை சாதிப்பெயர் சொல்லித் திட்டி, பிறந்தவீட்டுக்குப் போக்க்கூடாது என்று தடுத்து சித்தரவதை செய்த்தில் அவர் இறந்தார். அது கொலையா தற்கொலையா என்று வழக்கு நடக்கிறது. காரணம் சாதிவெறி. தஞ்சை மாவட்டம் ஆம்பலாப்பட்டுகிராமத்தைச் சேர்ந்த சத்யா டேனியல் செல்வகுமார் என்கிற தலித் இளைஞரை மணந்ததால் சாதுரியமாகப் பேசி கிராமத்துக்கு அவரை வரவைத்து அவருடைய காதில் விஷம் ஊற்றிக் கொன்றதன் காரணம்…? சாதிவெறி. இப்படி பட்டியல் போட்டால் போட்டுக்கொண்டே போகலாம். இத்தனை பெண்களின் கொலைகளுக்கும் காரணம் சாதிவெறி.. பெற்றோரின் சாதிவெறி இப்படி ஆதிக்க சாதிப்பெண்களைக்கொல்கிறது என்றால், ஆதிக்கசாதி ஆண்களின் சாதிவெறி தலித் பெண்களைக் கொல்கிறது.

சென்ற ஆண்டு கடலூரில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றிய சந்தியாவை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். எங்கெங்கே சாதிக் கலவரங்களும் வன்முறைகளும் ஒங்குகிறதோ அங்கெல்லாம் ஆதிக்க சாதிக்கு இரையாவது தலித் பெண்களின் உடல்கள்தாம். மன்னர் காலத்திலிருந்தே இன்னொரு நாட்டுக்குப் படையெடுத்துப் போகும் வீர்ர்கள் எதிரி நாட்டுப் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதைப் வரலாற்றில் வாசித்திருக்கிறோம். சமகாலத்திலும் இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது அங்கே பெண்களுக்கெதிராக பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட்தை ஈழத்துப்பெண்கள் வாய்மொழியாகச் சொல்லவும் இலக்கியங்களிலும் பதிவு செய்யப் பார்க்கிறோம். இப்படி பெண்களின் உடல் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பது என்பது அவர்களின் ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் பணத்திலோ பொருளாதாரத்திலோ அதிகாரத்திலோ உயர்ந்திருப்பதனாலும்கூட. இது உலகம் முழுவதும் உள்ள பொதுத்தன்மை. சாதியால் தான் உயர்ந்தவன் என்று தன்னைக் கருதிக்கொள்பவர்களுக்கும் இந்த ஆதிக்கத் தன்மை கடத்தப்படுகிறது. ஏற்கனவே தான் ஓர் ஆண் என்பதில் இருக்கும் ஆதிக்க உணர்வும் உடமை உணர்வும், அந்தப் பெண் ஒரு தலித் பெண் அல்லது மநுஸ்மிருதியின்படி தனக்குக் கீழுள்ள சாதியில் பிறந்தவள் என்றால் ஆணாதிக்கத்துடன் சாதி ஆதிக்கமும் வெறியும் இணைந்துகொள்ள அப்பெண்ணின் வயிற்றில் தன் கருவை வளரவிடுவதில்தான் தன் சாதிப்பெருமை அடங்கி இருப்பதாக நம்பும் வன்முறையாளன் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்கிறான். ஆனால் ஒரு சாதிக் கலவரத்தில், சாதிய வன்முறையில் மட்டும் தலித் பெண்ணின் உடல் தீண்டத்தக்கதாகிவிடுகிறது. அதாவது இந்தியாவில் பார்ப்பனியம் வளர்த்த புனிதம் தீட்டு என்கிற வகைப்பாட்டுக்குள் அடக்கிவிடும் மனித உயிர்களுள் தீட்டு என்று ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் சாதியில் பிறந்த பெண்களின் உடல் வன்முறையாய் புணரும்போது களங்கப்படுவதாக ஆதிக்கசாதி ஆண்மனம் எண்ணுகிறது. இதுவரை ஆதிக்கசாதிக்கு மட்டும் தீட்டாயிருந்த பெண்ணுடல் இனி அனைவருக்கும் தீட்டானதாக களங்கப்பட்டதாக மாறிவிடுவதாக அவன் நம்புகிறான். அதற்கான திட்டமே பாலியல் வல்லாங்கு.. சாதிய வன்முறையில் பாலியல் வன்முறை என்பதன் அடிப்படை களங்கப்படுத்தும் நோக்கமே இங்கே பிரதானம். பாலியல் விழைவோ இச்சையோ இரண்டாம்பட்சம்தான். ஆக பெண்ணுடல் இங்கே தன் வேட்கைக்காகவும், சாதிப்பெருமையை பறைசாற்றுவதற்காகவும் சிறுமைப்படுத்தப்படுகிறது. இதுவே கயர்லாஞ்சியில் பிரியங்காவுக்கு நடந்தது. சாதிமோதல், சாதிக்கலவரம் எதுவுமே இல்லாமல் வெறுமனே அதிகாரம் மட்டுமேயானாலும் கூட அதற்கும் தலித் பெண்களின் உடல்கள் இரையாகும் கொடூரத்தின் சாட்சிகளாய் நாம் இருக்கிறோம். வாச்சாத்தியில் பழங்குடியின பெண்களுக்கு நடந்தது என்ன? வனத்துறையும் காவல்துறையும் இணைந்து பெண்ணுடலில் பாலியல் சித்திரவதை செய்தன. அரச அதிகாரம், காக்கிச்சட்டை என்கிற அதிகாரம் என்கிற இரட்டை அதிகாரத்துடன் ஆண் என்கிற அதிகாரமும் இணைய, அதிகாரமில்லாத தலித் பழங்குடியினப் பெண்கள் அச்சப்படுவார்கள் வெளியில் சொல்லமாட்டார்கள், மிரட்டி வைக்கலாம் என்று அவர்களிடம் அத்துமீறி பாலியல் வன்புணர்ச்சிகளுக்குப் பின்னால் சாதியுணர்வு இல்லை என்று சொல்ல முடியாது. இங்கே வன்புணர்ச்சியாளர்களின் சாதிகள் நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் அவர்கள் பழங்குடியினர் அல்ல. வல்லாங்கு செய்தது அரச அதிகாரம் மட்டுமல்ல, சாதிய மனமும் சேர்ந்துதான்.